தகடூர் பெருமை மற்றும் அதியமான் வரலாறு....

Thursday, September 9, 2010

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன..

அதியமான் மரபின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றியவர்கள். வேள்வி வேட்டுச் சிறந்தவர்கள். கரும்பு பயிரிடும் மரபை அறிந்து இவ்வுலகில் கரும்பு பயிரிடச் செய்தவர்கள்..
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று  கருதுகிறார்கள்..


கல்வெட்டுகள்:
தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம்.
இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.


ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி


என்று கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

அதியமான் புகழ்பாடிய புலவர்கள்: 


ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே..


"இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புண்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாங்குலன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லை
பாடுநர்க்கு ஒன்றீகுநருமில்லை" புறம்..
                                               - அவ்வையார். 

"நெல்லி அமிழ்து விளை தீகனி ஔவைக்கு ஈந்த அதிகன்"
                                                - நல்லூர் நத்தத்தனார்                                          (சிறுபாணாற்றுப்படையில் )


மேலும், 
               பரணர், மாமூலனார், அரிசில்கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தைமகள் நாகையார், ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன.

0 comments: